பாரிமுனையில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் ஏற்பட்ட தீவிபத்தால் தங்கள் பணம் மற்றும் நகைகள் என்ன ஆனதோ என்ற பதற்றத்தில் அதன் வாடிக்கையாளர்கள் வங்கி அருகே குவிந்தனர். இந்நிலையில் வங்கியின் ஆவணங்கள், நகை மற்றும் பணம் 3 இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இதன் தரைத்தளம் உட்பட 3 தளங்களில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வந்தது. தரைத்தளத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ராஜாஜி சாலை கிளை அலுவலகம், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க அலுவலகங்கள் இருந்தன. முதல் தளத்தில் பாதுகாப்புப் பெட்டக அறை, இணையத்தள பிரிவு, எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் நலச் சங்க அலுவலகம் ஆகியவையும், இரண்டாவது தளத்தில் மண்டல அலுவலகத்தின் ஒரு பகுதி, சென்னை சிறு மற்றும் நடுத்தர எண்டர்பிரைசஸ் அலுவலகமும் இயங்கி வந்தன.
இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் சுமார் 40 கிளைகளுக்கு அனுப்புவதற்காக ரிசர்வ் வங்கியில் இருந்து நேரடி யாக கொண்டு வரப்படும் கோடிக் கணக்கான பணம் வைக்கப்படும் அறை இருந்தது. இதுதவிர, தரை தளத்தில் 4 ஏ.டி.எம்.களும் இருந்துள்ளன.
இந்நிலையில், சனிக்கிழமை யன்று மாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த கட்டிடத்தின் இரண்டு மாடிகள் இடிந்து விழுந்தன. இதைத்தொடர்ந்து கட்டிடத்துக்குள் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கட்டிடத்துக்குள் எவரும் நுழையாத படி போலீஸார் சுற்றி நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார், 20க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் போலீஸார் மட்டும் ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் வங்கி கட்டிடத்திற்குள் சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். அவர்கள் ஆய்வு செய்யும்போது கட்டிடம் இடிந்து விழுந்து பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தீ விபத்து ஏற்பட்ட இந்த வங்கி கிளையில் சுமார் 25,000 வாடிக்கையாளர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் தெரிந்ததும், வாடிக்கையாளர்கள் பலர் ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் வங்கியருகே திரண்டு வந்தனர். அங்கிருந்த அதிகாரிகளிடம் தங்களின் பணம் மற்றும் நகைகள் குறித்து தகவல்களை கேட்டறிந்தனர். இதையடுத்து, அங்கு வாடிக்கையாளர்களின் வசதிக்காக உதவி மையமும் அமைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் லாக்கர்களில் உள்ள நகைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர்களிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
வங்கியின் வாடிக்கையாளர்கள் ஜூலியன் மற்றும் அவருடைய மனைவி மேரி ஆகியோர் கூறும் போது, ‘‘எங்களின் பணத்துக்கும் நகைக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை என்று வங்கி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் இந்த பெரிய தீ விபத்தில் நகைகளுக்கு எதாவது ஆகியிருக்குமோ என்ற அச்சம் உள்ளது. எங்களைப் போன்ற பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களும் கலக்கத்தில் இருக்கின்றனர்’’ என்றனர்.
இது தொடர்பாக வங்கியின் தலைமை பொது மேலாளர் சூர்யபிரகாஷ் கூறியதாவது:
இந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. வங்கியின் முக்கிய ஆவணங்கள், பாதுகாப்பு பெட்டகங்கள் பாதுகாப்பாக உள்ளன. கட்டிடத்திற்கு மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் 2 மாடிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
மொத்த சேத மதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம். காலையில் இன்ஷூரன்ஸ் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர். பின்னர், கிண்டி ஐ.ஐ.டி.யில் இருந்து பொறியாளர்கள் வந்து கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். தொல் பொருள் துறையினரும் விரைவில் வந்து ஆய்வு நடத்துவார்கள். இங்கு இருந்த சிறு மற்றும் நடுத்தர எண்டர்பிரைசஸ் அலுவலகம் தி.நகருக்கு மாற்றப்படுகிறது. இங்குள்ள பணம், நகைகள் பாதுகாப்பாக வேறு கிளைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
இதேபோல், ஸ்டேட் வங்கியின் சென்னை முக்கிய கிளை பிராட்வேக்கு மாற்றப்படும். அதுபோல், ராஜாஜி சாலை கிளை எழும்பூரில் உள்ள ஸ்டேஷன் ரோடுக்கு மாற்றப்படுகிறது. அடுத்த 48 மணிநேரத்தில், மாற்றப்பட்டுள்ள புதிய கிளைகள் செயல்படும். கோர் பேங்கிங் வசதியுள்ளதால், வாடிக்கையாளர்களின் முழுத் தகவல்களும் பாதுகாப்பாக இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
தொல்பொருள் ஆய்வு துறையினர் இன்று வருகை
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தொல்பொருள் ஆய்வு துறையினர் வரவில்லை. இதையடுத்து, திங்கள்கிழமையன்று அவர்கள் வந்து ஆய்வு நடத்தவுள்ளனர். அவர்கள் கட்டிடத்தின் உறுதிதன்மை குறித்து ஆராய்ந்து அதை பழுது பார்த்து புதுப்பிக்க முடியுமா அல்லது இடிக்க வேண்டுமா என்பது பற்றி முடிவு செய்வார்கள் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வங்கியின் வாடிக்கையாளர் கள் தங்கள் பணம் மற்றும் லாக்கரில் வைத்திருந்த பொருட்களைப் பற்றி தகவல் அறிய 9445861245, 9445892903 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.