புதுச்சேரி: பாஜக வெற்றிக்கு இந்துத்துவ அடையாளத்தை வைத்து திமுகவின் செந்தில்குமார் எம்.பி. கேலி செய்து பேசியுள்ளது கண்டனத்துக்கு உரியது என புதுசசேரி பாஜக தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி இன்று வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றக் கூட்டத்தில் தருமபுரி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார், ராஜஸ்தான், சத்திஸ்கர், மத்திய பிரதேசத்தில் பாஜக பெற்ற வெற்றிகளை தனக்கே உரிய வெறுப்பு வார்த்தைகளுடன் விமர்சித்துள்ளார். பசு கோமியம் மாநிலங்களில் வெற்றி பெற முடிந்த பாரதிய ஜனதாவால் தென் மாநிலங்களில் வெற்றிபெற முடியாது என இந்துக்களின் கலாச்சார அடையாளத்தை கேலி செய்து பேசியுள்ளார். புதுச்சேரி பாரதிய ஜனதா சார்பிலும், பாஜக எம்.பி. என்ற முறையிலும் அவருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
செந்தில்குமார் எம்.பி. இது போன்று இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது இது முதல் முறையல்ல. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் ம.பி, ராஜஸ்தான், சத்திஸ்கரில் பாஜக இமாலய வெற்றி பெற்றதற்கு திமுக அமைச்சர் உதயநிதியின் சனாதன எதிர்ப்பு கருத்துகளும் முக்கிய காரணங்களாக அமைந்தன. கோமூத்ரா மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது என்றால் இதற்கு முன்பு ராஜஸ்தானில், சத்திஸ்கரில் காங்கிரஸ்தானே ஆட்சியில் இருந்தது. அப்போது அது கோமூத்ரா மாநிலங்கள் என்பது திமுக எம்.பி செந்தில்குமாருக்கு தெரியாதா? காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால் இந்த விமர்சனத்தை அவர் முன்வைத்திருப்பாரா இது போன்ற நியாயமான பல கேள்விகள் இந்தியர்களிடம் குறிப்பாக பெரும்பான்மை இந்துக்களிடம் எழ ஆரம்பித்துள்ளது.
மோடி இந்த நாட்டின் பிரதமர் மட்டுமல்ல. பல நூறு ஆண்டுகளாக சிதைக்கப்பட்டு, புதைக்கப்பட்டு வந்த இந்து கலாச்சார அடையாளங்களை மீட்டெடுக்கும் மீட்பர். அதனால்தான் நாடு முழுக்க பாஜக அலை வீசிக்கொண்டிருக்கிறது. இனியும் வீசும். தென் மாநிலங்களில் பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது என்று பேசியிருப்பதும் அபத்தமானது. அதையும் பிரதமர் மோடி படை முறியடித்துக்கொண்டு வருகிறது. கர்நாடகத்தில் 37 சதவிகித வாக்கு வங்கியுடன் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. அதற்கு முன்பு அந்த மாநிலத்தை ஆட்சி செய்த கட்சியும் பாஜகதான். புதுச்சேரியில் இப்போது பாஜக கூட்டணி அரசில் இடம்பெற்று இருக்கிறது. தெலங்கானாவில் 6.7 சதவிகித வாக்குகளில் இருந்து இப்போது 13.8 சதவிகித வாக்குகளை பாஜக பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது.
தமிழகத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் மக்கள் யாத்திரை மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மிஞ்சி இருப்பது ஆந்திராவும், கேரளாவும்தான். அங்கும் எதிர்ப்பலைகளைத் தாண்டி மோடி அலை வீசும். வெற்றிக் கொடி பறக்கும். நாத்திகத்தை மூலதனமாக்கி அரசை கைப்பற்றிய திமுகவுக்கும் அதன் எம்.பி. செந்தில்குமாருக்கும் இதையே பதிலாக தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 1982-ம் ஆண்டு 2 எம்.பி.க்களுடன் தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கிய பாரதிய ஜனதா இன்று 303 எம்.பிக்களுடன் உள்ளது. விமர்சனங்களை தாங்கி தாங்கியே வெற்றிபெற்ற எங்கள் கட்சி, திமுகவினரின் சனாதன எதிர்ப்பு பேச்சுகளால் 2024 தேர்தலில் 415 எம்.பி.க்களை பெற்று கடந்த கால நாடாளுமன்ற சரித்திரங்களை முறியடிக்கும் என்பது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்'' என்று செல்வகணபதி தெரிவித்துள்ளார்.