திருச்சி/நாகர்கோவில்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், டிஎஸ்பி மற்றும் மகளிர் திட்ட இயக்குநர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் சி.முத்தரசு (54). தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய இவர், அண்மையில் டிஎஸ்பியாகப் பதவி உயர்வு பெற்று, திருச்சி மாவட்ட குற்றப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
திருச்சி விமானநிலையம் அருகில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பணியின்போது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, பலரிடம் லஞ்சம் பெற்றதாகவும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்குப் புகார்கள் சென்றன.
இதனடிப்படையில், முத்தரசின் வீட்டில் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீஸார் நேற்று காலை 6 மணி முதல் மாலை 4.30 வரை சோதனை மேற்கொண்டனர். டிஎஸ்பி முத்தரசு 2014 முதல் தற்போது வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.80 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அவரது வீட்டில் இருந்த 40 நில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
இதேபோல, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை கல்யாணசுந்தரம் நகரிலும் இவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டை அவர் வாடகைக்கு விட்டுள்ள நிலையில், அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், அங்கு குடியிருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மகளிர் திட்ட இயக்குநர்: இதேபோல, புதுக்கோட்டை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ரேவதிக்கு சொந்தமாக நாகர்கோவிலில் உள்ள வீட்டில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மகளிர் திட்ட அதிகாரி ரேவதி மீது, லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகாருக்கு உள்ளான ரேவதி குமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்தவர். வடிவீஸ்வரம் கீழபள்ளத்தெருவில் உள்ள அவரது வீட்டில், புதுக்கோட்டையில் இருந்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் பீட்டர் தலைமையில் வந்த 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். காலையில் தொடங்கிய சோதனை, மாலை வரை நடைபெற்றது.
இந்த சோதனையின்போது, ரேவதி வீட்டில் இருந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.