சென்னை: சென்னையில் கொட்டித் தீர்த்த கன மழை காரணமாக இணைப்பு சாலைகள் மட்டுமல்லாமல் பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர்கூட தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் சாலைகளைப் பயன்படுத்த முடியாமல் தவித்தனர். மீறிச் சென்ற பல வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நடுவழியில் நின்றன. எனவே சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் பழுதான வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு மழையில் நனைந்தபடி பல கி.மீட்டர் தூரத்துக்கு நடந்தே சென்றனர். சிலர் பிற வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டுப் பயணித்தனர்.
தொடர் கனமழை நேற்று முன்தினம் இரவோடு முடிவுக்கு வந்தது. இருப்பினும் பல இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, பாலவாக்கம், கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான சாலைகளில் தேங்கி நின்ற மழைநீர் வடிந்த நிலையிலும் சாலையின் இருபுறமும் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் அப்படியே உள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகினர். போர்க்காலஅடிப்படையில் மழை நீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால் அடையாறு, கூவம்,பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்டபகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து பாய்ந்தது. இதை நேற்று பொதுமக்கள் கரையோரம் நின்றவாறு வேடிக்கை பார்த்தனர். சிலர் வெள்ளத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். சிலரோ வெள்ள நீர் பாய்வதை பின்னணியாக வைத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.