திருச்சி துணை மேயராக இருந்த ஆசிக் மீரா மீது சங்கிலியாண்ட புரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி என்கிற இளம்பெண் காவல் துறையில் பாலியல் பலாத்காரம், கட்டாய கருக்கலைப்பு, கொலை மிரட்டல் செய்ததாக புகார் செய்திருந்தார். அதனால் ஆசிக் மீரா ஜூன் 16-ம் தேதி தனது துணை மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
துர்கேஸ்வரியின் புகார் மீது ஜூன் 26-ம் தேதி 5 பிரிவுகளில் ஆசிக் மீரா, அவரது மாமியார் மைமூன், நண்பர்கள் சந்திரபாபு, சரவணன் ஆகிய 4 பேர் மீது பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர்களையும் கைது செய்வதற்காக தேடிவந்தனர். அவர்கள் ஜாமீன் பெறுவதற்காக மனு செய்து தலைமறைவாக இருப்பதால் கைது செய்ய இயலவில்லை என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட துர்கேஸ்வரி திங்கள்கிழமை திருச்சி 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலை 11.30 மணியிலிருந்து 2.30 மணிவரை ரகசிய வாக்குமூலம் அளித்தார். குற்றவியல் நடுவர் அல்லியிடம் துர்கேஸ்வரி 3 மணி நேரம் அனைத்து விவரங்களையும் ரகசிய வாக்குமூலமாக அளித்தார். இதற்கிடையே துர்கேஸ்வரி அவரது குழந்தை ஆகியோருக்கு மரபணு பரிசோதனை நடத்த நீதிமன்ற அனுமதி கேட்டு பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
வழக்குப் பதிந்து 5 நாட்களாகியும் ஆசிக் மீரா மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவில்லை காவல் துறை. அதனால் குற்றவாளிகளை காப்பாற்ற முயலும் காவல் துறையைக் கண்டித்து இன்னும் ஓரிரு தினங்களில் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார் துர்கேஸ்வரியின் வழக்கறிஞர் பானுமதி.