கலவை வட்டம் சென்னசமுத்திரம் கிராமத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காந்தி. அருகில், மாவட்ட ஆட்சியர் வளர்மதி உள்ளிட்டோர். 
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,635 ஏக்கரில் பயிர்கள் சேதம்: அமைச்சர் கள ஆய்வு

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர் மழை பெய்தது. இதனால், நெமிலி, காவேரிப் பாக்கம், ஆற்காடு, பனப்பாக்கம், சோளிங்கர், திமிரி, கலவை உட்பட பல்வேறு இடங்களில் நெல், பருப்பு வகைகள் உட்பட தோட்டக் கலை பயிர்களான மிளகாய், வெங்காயம், வாழை, கத்தரிக்காய், பூச்செடிகள் என நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நெல், பருப்பு வகைகள் என மொத்தம் 1,035 ஏக்கரும், தோட்டக்கலை பயிர்கள் 600 ஏக்கர் என மொத்தம் மாவட்டத்தில் 1,635 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பயிர் சேதங்கள் குறித்து அமைச்சர் ஆர்.காந்தி பல்வேறு இடங்களில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, கலவை வட்டம் சென்ன சமுத்திரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 8 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 195 குடும்பங்களுக்கு அமைச்சா் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தனது சொந்த செலவில் பாய், போர்வை, குழந்தைகளுக்கு பால் பவுடர், 15 கிலோ அரிசி வழங்கினார். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.

ஓட்டு வீடு சேதம்...: ராணிப்பேட்டை நகராட்சி 11-வது வார்டு பிஞ்சி ஜெயராம்பேட்டையைச் சேர்ந்த சின்னபையன். இவரது மனைவி மலர். இவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீடு ஒரு பகுதி மழைக்காரணாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில், தம்பதியரின் மகன் ஸ்ரீதர் (18) என்பவர் லேசான காயமடைந்தார். அவர், உடனடியாக மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலறிந்த அமைச்சர் ஆர்.காந்தி அந்த வீட்டினை நேற்று பார்வையிட்டார்.

அவர்களுக்கு தேவையான பாய், போர்வை, தலையணை மற்றும் 10 கிலோ அரிசி மற்றும் 10 ஆயிரம் ரூபாயும் வழங்கினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT