மதுரை: மதுரையில் ‘பணி நிறைவு சான்றிதழ்’ ( completion certificate) வழங்குவதை மாநகராட்சி கடுமையாக்கிவிட்டதால் நகரமைப்பு வரைப்பட விதிமுறைகளை மீறி கட்டிய வணிக கட்டிடங்கள், இந்தச் சான்றிதழை பெற்று மின் இணைப்பு பெற முடியாமல் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் அதிகம் வந்து செல்லும் வணிக கட்டிடங்களில் போதுமான "பார்க்கிங்", பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கட்டப்படுவது அதிகரித்தது. மாநகராட்சி அனுமதித்த வரைபடம் அடிப்படையில் வணிக கட்டிடங்கள் பொதுவாக கட்டப்படுவதில்லை. அதனாலே, அந்தக் கட்டிடங்களுக்கு வரும் பொதுமக்கள், சாலையில் வாகனங்களை நிறுத்தும் நிலை உள்ளதால் இந்தக் கட்டிடங்கள் அமைந்துள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாநகர சாலைகளில் இந்த நெரிசலை தவிர்க்கவும், உரிய அனுமதியின்றி வணிக ரீதியான கட்டிடப்பணிகள் நடப்பதை தடுக்கவும், அந்தக் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குவதை தடுக்க கிராம பஞ்சாயத்து முதல் மாநகராட்சி பகுதியில் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் பணிநிறைவு சான்றிதழ் (completion certificate) வழங்க வேண்டும் என்ற புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்தப் பணி நிறைவு சான்றிதழ் வழங்கினால் மட்டுமே மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்க முடியும்.
இந்த நடவடிக்கை கடுமையாக தற்போது பின்பற்றப்படுவதால் ஒரளவு விதிமீறல் வணிக கட்டிடங்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. இருப்பினும், மதுரை மாநகராட்சியில் தமிழக அரசின் இந்த புதிய நடைமுறைகளை காற்றில் பறக்கவிட்டு தனியார் நிறுவனங்கள் கட்டிடங்களை கட்டி வருகின்றனர். ஆனால், அவர்களால் மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் இருந்து கட்டிட சான்றிதழ் பெற முடியவில்லை. அதனால், அவர்களால் மின் இணைப்பும் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
இது குறித்து மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "மதுரை மாநகர பகுதியில் இந்த புதிய உத்தரவு அடிப்படையில் வணிக நிறுவன கட்டிடம் கட்ட வேண்டுமானால், மாநகராட்சி நிர்வாகம் அல்லது உள்ளூர் திட்ட குழுமம் (எல்.பி.ஏ.) அனுமதி பெற வேண்டும். 2,000 சதுர அடி வரையில் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கு மாநகராட்சியும், அதற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு உள்ளூர் திட்ட குழுமமும் வரைப்பட அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு அவர்கள் கட்டி முடித்த வணிக கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழும் வழங்க வேண்டும்.
மாநகராட்சியில் குடியிருப்பு வீடாக இருக்கும் பட்சத்தில் 10 ஆயிரம் சதுர அடி வரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவும், அதற்கு மேல் உள்ளூர் திட்ட குழுமம் அனுமதி வழங்க வேண்டும். ஆனால், குடியிருப்புகளுக்கு பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் இல்லை. அதனால், இந்த புதிய நடைமுறை குடியிருப்புகளுக்கு பொருந்தாது. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டே மாநகராட்சிப் பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். ஆனால், மாநகராட்சிப் பகுதியில் கட்டிட அனுமதி பெறும் நிர்ணயிக்கப்பட்ட சதுர அடிக்கு மேல் விதிமுறைகளை மீறி வணிக கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
அந்த கட்டிடங்களுக்கு இதுவரை மாநகராட்சி பணி நிறைவு சான்றிதழ் வழங்கவில்லை. கடந்த காலத்தில் விதிமுறை மீறல் கட்டிடக் காரர்களும் எந்த கடிவாளமும் இல்லாமல் மின் இணைப்பு பெற்று வந்தனர். தற்போது மாநகராட்சி பணி நிறைவு சான்றிதழ் ( completion certificate) வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் நடைமுறை பின்பற்றப்படுவதால் விதிமீறல் வணிக கட்டிட உரிமையாளர்கள் இந்த பணி நிறைவு சான்றிதழ் பெற்று மின் இணைப்பு, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பெற முடியாமல் தவிக்கிறார்கள்" என்றனர்.