வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்பட்ட அதிக கட்டண டிக்கெட்டுகள். 
தமிழகம்

வேலூர் - ஆற்காடு இடையே தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் அடாவடியாக அதிக கட்டணம் வசூலிப்பு

வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் தனியார் பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி பயணிகளிடம் அடாவடியாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ பகுதியில் முரளி என்ற வாசகர் புகார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கிராமப்புறங்களை நகர்புறங்களோடு இணைப்பதில் அரசு நிர்வாகம் பெரியளவில் வெற்றியை பெற்றுள்ளது. பெருநகரங்களின் வளர்ச்சி இரண்டாம் நிலை நகரங்களுக்கும் கிடைக்கும் வகையில் இணைப்பு பாலமாக தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன.

அதேபோல், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுடன் கிராமப்புற சாலைகள் இணைவதால் அடித்தட்டு மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், மருத்துவம் போன்ற பல்வேறு வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன. பல் வேறு திட்டங்களின் கீழ் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும் பொது போக்குவரத்து வசதிகள் மூலம் சாமானிய மக்களின் எதிர்கால வளர்ச்சி யின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் அரசு பொது பேருந்து சேவைகள் கிடைப்பது மாநிலத்தின் வளர்ச்சியில் முதுகெலும்பாக இருக்கிறது.

இதில், அரசுக்கு துணையாக தனியார் நிறுவனங்களும் பொதுமக்களுக்கு பேருந்து சேவைகளை அளித்து வருவதும் பாராட்டுக்கு உரியது. மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டண விகிதங் களின் அடிப்படையில்தான் தனியார் பேருந்துகளிலும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது அரசின் உத்தரவாக உள்ளது. ஆனால், ஒரு சில தனியார் பேருந்துகள் அரசின் உத்தரவை மீறி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக வேலூர் மாவட் டத்தில் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக முரளி என்பவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ பகுதியில் தெரிவித்துள்ள புகாரில், ‘‘வேலூரில் இருந்து ஆற் காடுக்கு தினசரி வேலை தொடர்பாக சென்று வருகிறேன். வேலூரில் இருந்து ஆற்காடுக்கு அரசு நிர்ணயித்த கட்டணமாக ரூ.16 உள்ளது.

இதே கட்டணத்தைத்தான் அனைத்து அரசு பேருந்துகளிலும் வசூலிக்கிறார்கள். ஆனால், வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் தனியார் பேருந்துகளில் ரூ.20 கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த கட்டணம் வேலூரில் இருந்து ஆற்காடு வழியாக வாலாஜா செல் வதற்கானது. ஏன் இப்படி அதிக கட்டணம் வசூலிக்கிறீர்கள் என்று கேட்டால் ‘இஷ்டம் இருந்தால் ஏறு, இல்லாவிட்டால் இறங்கு’ என்று தனியார் பேருந்து நடத்துநர்கள் மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள். அவசர நேரத்தில் வேறு வழி யில்லாமல் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டியுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை இவர்கள் அப்பட்டமாக மீறி வசூலிக்கிறார்கள்.

அரசின் உத்தரவை மீற இவர்களுக்கு யார் தைரியம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. டீசல் விலை உயர்வு என்பது எல்லோருக்கும் பொது வானதுதான். அதென்ன வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் தனியார் பேருந்துகளுக்கு மட்டும் என்று தெரிய வில்லை. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இவர்களுக்கு யார் கடிவாளம் போடுவது என்றும் புரியவில்லை’’ என்றார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்தபோது, வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் குறப்பிட்ட 5 தனியார் நிறுவனங்களின் பேருந்துகளில் இந்த அடாவடி வசூல் நடப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து, வேலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘அதிக கட்டணம் வசூல் புகார் குறித்து ஏற்கெனவே சோதனை நடத்தி 5 பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி வழக்குகள் பதிவு செய்து நோட்டீஸ் வழங்கியுள்ளோம். மேலும், அதிக கட்டணம் வசூலிக்கப் பட்டது தொடர்பாக அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளோம். அந்த பேருந்துகளுக்கு எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் என்பதை ஆட்சியர்தான் முடிவு செய்வார். இந்த புகார் மீண்டும் எழுந் துள்ளதால் மறுபடியும் சோதனை நடத்திய தனியார் பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT