சென்னை: சென்னையில் நேற்று மாலை நேரத்துக்குப் பிறகு மாநகர பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
சென்னையில் கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான இடத்தில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓட்டுநர், நடத்துநர்கள் அதிகாலையில் பணிமனைக்கும், இரவு பணி முடித்தவர்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலை இருந்தது. அதே நேரம், 4 மாவட்டங்களில் பொதுவிடுமுறை விடப்பட்டதால் பேருந்து நிலையங்கள், நிறுத்தங் களிலும் மக்கள் கூட்டம் இல்லை. எனவே, நேற்று காலை முதல் மாலை வரை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தேவைக்கேற்ப குறைவான சேவை வழங்கப்பட்டன.
குறிப்பாக பிரதான சாலைகளில் வெகு சில பேருந்துகள் மட்டுமே இயங்கின.
இந்த சேவையும் பிற்பகலுக்குப் பிறகு படிப்படியாக குறைத்து, மாலை நேரத்தில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
இன்று காலை முதல் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்துவதாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம், தேவைக்கேற்ப விரைவு பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. 100 அடி சாலை முழுவதும் நீர் தேங்கியிருப்பதால் மீனம்பாக்கம், தாம்பரம் சாலைகளை தவிர்த்து, கோயம்பேட்டில் இருந்து போரூர் உள்ளிட்ட பகுதிகள் வாயிலாக சில பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே நேரம், கிளாம்பாக்கத்தில் தேங்கும் நீரை திருப்பி விடுவதால் வண்டலூர், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளிலும் நீர் தேங்கியிருந்தது. இதனால் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்குமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தது.