சென்னை: புயல், மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணை:
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை மற்றும் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்த 4 மாவட்டங்களுக்கும் செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், சிறப்பு நிகழ்வாக டிசம்பர் 4-ம் தேதி (இன்று) பொது விடுமுறை விடப்படுகிறது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், குறிப்பாக கழகங்கள், வாரியங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று மூடப்பட்டிருக்கும்.
அதே நேரம், அத்தியாவசிய சேவைகளான காவல் துறை, தீயணைப்பு, உள்ளாட்சி அமைப்புகள், பால், குடிநீர், மின்சார விநியோகம், மருத்துவமனை, மருந்தகம், உணவகம், போக்குவரத்து, பெட்ரோல் பங்க் ஆகியவையும், பேரிடர் மீட்பு தொடர்பான அலுவலகங்கள், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் வழக்கம்போல செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
4 மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் வழக்கம்போல செயல்படும் என உயர் நீதிமன்ற பதிவாளர் எம்.ஜோதிராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஆட்சியர்கள் ஏற்கெனவே இன்று விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
4 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை இயன்றவரை வீட்டிலிருந்தபடியே பணியாற்றுமாறு அறிவுறுத்த வேண்டும். தவிர்க்க இயலாதநிலையில், அத்தியாவசியப் பணியாளர்களை மட்டுமே வைத்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.