கள்ளக்குறிச்சி/தஞ்சாவூர்/தென்காசி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்லில் விஜயகாந்த் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற விருத்தாசலத்தில், தேமுதிகவினர் மற்றும் அவரது நலம் விரும்பிகள் விஜயகாந்த் குணமடைய வேண்டி, விருத்தகிரீஸ்வரர் கோயிலில் நேற்று ஆயுஷ் ஹோமம், பூஜைகளை நடத்தினர்.
தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்மன் சந்நிதியில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். விஜயகாந்த் குணமாகி, மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் வேண்டிக்கொண்டனர். இதில் தேமுதிகவினர் மட்டுமின்றி, கட்சி சார்பற்றவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
புன்னைநல்லூரில்: இதேபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெறவேண்டி, தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தேமுதிக மாவட்டச் செயலாளர் ப.ராமநாதன் தலைமையில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, தொண்டர்கள் 7 பேர் முடிகாணிக்கை செலுத்தினர்.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தேமுதிக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ஏ.ஆர்.பூபேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் கே.வி.ஆர்.ராஜரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலங்குளத்தில்: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் முத்து மாரியம்மன் கோயிலில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தேமுதிக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனிசங்கர் அங்கப் பிரதட்சணம் செய்தார். நிகழ்ச்சியில், மாவட்டஅவைத் தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் பிரின்ஸ் மாதவன், காமராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.