தமிழகம்

மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிய நீரில் நடந்து செல்ல கூடாது

செய்திப்பிரிவு

சென்னை: வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து, தமிழக அரசு மின் ஆய்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மழைக் காலங்களில் மின்கம்பிகள் அறுந்துக் கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சாலைகளிலும், தெருக்களிலும், மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சாரகம்பிகள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும். ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்க வேண்டாம். மின் கம்பி இணைப்புகளை திறந்த நிலையில் இல்லாமல் இன்சுலேஷன் டேப் சுற்றி பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஈரப்பதமான சுவர்களில் கை வைக்கக்கூடாது.

மின்சார கசிவு, மின் அதிர்ச்சி ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது மின்வாரியத்தின் 24 மணி நேர சேவை எண் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT