கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலமாக மழைநீரை வெளியேற்றும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன்குமார், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். 
தமிழகம்

சென்னையில் 135 இடங்களில் வெள்ளநீர் தேக்கம்: நிவாரண முகாம்களில் 399 பேர் தங்கவைப்பு- அமைச்சர்கள், மேயர் ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று 135 இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வந்த 399 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புயல் காரணமாக காசிமேடு, மெரினா, பெசன்ட்நகர் போன்ற கடற்கரை பகுதிகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டன. இதனால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரமணாக சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி 135 இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோட்டார்கள் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுவரை 399 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில் மீண்டும் வெள்ளநீர் தேங்கியதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். திரு.வி.க 2-வது தெருவிலும் வெள்ளநீர் குட்டைபோல் தேங்கியது. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் அருகில் அவ்வை சண்முகம் சாலையும் தண்ணீரால் சூழப்பட்டு வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருந்தது. மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் மழைநீர் தேங்கியதால், மூடப்பட்டது.

தியாகராய நகர் பனகல் பூங்காவையொட்டி பகுதிகள், உஸ்மான் சாலை, அபிபுல்லா சாலை ஆகிய பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கியது. நுங்கம்பாக்கம் பிரதான சாலையில் வெள்ளநீர் ஆறு போல் ஓடியது. மழை நீருடன், பாதாள சாக்கடை இயந்திர நுழைவு குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. நுங்கம்பாக்கம் குளக்கரை சாலை 1-வது தெரு, நூர் வீராசாமி தெரு, ஜெயலட்சுமிபுரம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கியதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

சூளைமேடு வடஅகரம் சாலையில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதாலும், கீழ்ப்பாக்கம் ஃபிளவர்ஸ் சாலை, தாசபிரகாஷ் அருகே பூந்தமல்லி சாலை ஆகிய இடங்களில் வெள்ளநீர் தேங்கியதாலும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர், முதல்வர் தொகுதி இடம்பெற்ற திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பிறகு அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறும்போது, "மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் வீட்டுக்கு கூட செல்லவில்லை. அனைவரும் 925 மோட்டார்களுடன் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் வெள்ள நீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு மழைநீர் வடிகால் தான், தற்காலிகமாக தான் மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சென்னையில் தண்ணீர் நின்றாலே சாலை பள்ளம் ஆகிவிடுகிறது. மழை நின்ற பிறகு சாலைகள் சரி செய்து தரப்படும். சேதமான சாலைகளில் எச்சரிக்கை பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

புறநகர் பகுதிகளில்...: தொடர் மழையால் மூவரசம்பேட்டை ஏரி நிரம்பி அதன் உபரி நீர் கீழ்கட்டளை மற்றும் அதை சுற்றிய குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் பிருந்தாவன் நகர், ஜெயலட்சுமி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். அந்தப் பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகள் இதுவரை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை என்று புகார்கள் கூறப்படுகின்றன.

இதேபோல், மடிப்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதுடன், மழைநீரும் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை அருகில் உள்ள சேரன் நகர் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சேரன்நகர் சாலை மோசமாக பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர்.

SCROLL FOR NEXT