திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 153 நீர்நிலைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல் துணை கண் காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது ஆரணி உட் கோட்ட காவல் சரகத்துக்கு உட்பட்ட ஆரணி நகரம், கிராமியம், களம்பூர், சந்தவாசல் மற்றும் கண்ணமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப் பட்டு, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆரணி கிராமிய காவல் நிலைய கட்டுப் பாட்டில் 97 கிராமங்கள் உள்ளன. இதனால் நிர்வாக வசதிக்காகவும், மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்கவும் கிராமிய காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, ராணிப் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் திருடுபோன கைபேசிகளை கண்டுபிடிக்க விரைவில் ‘செல் டிராக்கர்’ செயலி தொடங்கி வைக்கப்பட உள்ளது. வட கிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான நீர்நிலை பகுதிகளான 153 ஏரி, குளங்கள், 112 தரைப்பாலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பகுதி யில் அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு வழங்கப்படும். ஒவ்வொரு நீர் நிலையையும் தலைமை காவலர் தலைமையில் 4 பேர் அடங்கிய குழு கண்காணிக்கிறது. நீர்நிலைகள் அருகே வசிக்கும் மக்களை கயிறுகள் மூலம் மீட்கவும் தயாராக உள்ளோம். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆரணி நகருக்குள் கனரக வாக னங்கள் வருவதை தடுத்து புறவழிச் சாலையில் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். இந்த ஆய்வின் போது, காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச் சந்திரன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர். வட கிழக்கு பருவ மழை தீவிர மடைந்துள்ளதால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.