மதுரை: மதுரையில் ஒரு நாளைக்கு 6 முதல் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. 80 பேருக்கு தினமும் மற்ற வைரஸ் காய்ச்சலும் உறுதி செய்யப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக, மதுரை மாநகராட்சி பகுதியில் நீர்வரத்துக் கால்வாய்கள், வாய்க்கால்களை தூர்வாரி இருக்க வேண்டும். அதுபோல், குடியிருப்புகள், பொது இடங்களில் மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு மழைநீர் தேங்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். டெங்கு பரவுவதற்கு காரணமான பொருட்களை அகற்றியிருக்க வேண்டும்.
ஆனால், மாநகராட்சி நிர்வாகம் தாமதமாக பருவமழை பெய்த பிறகே கால்வாய்களை தூர்வாரத் தொடங்கியது. அதனால், தற்போது மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
தினமும் அரசு ராஜாஜி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஆனால், சுகாதாரத் துறை டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான கணக்கை வெளிகாட்டவில்லை. அந்த கணக்கு தெரியவந்தால் பொதுமக்கள் அச்சமடையவார்கள் என்பதால் வெளியிடவில்லை எனக்கூறப்படுகிறது.
மேலும், ஏற்கெனவே, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட விஷயம்தான், மாநகராட்சி நகர்நல அதிகாரிக்கும், மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது. அதனால், டெங்கு பாதிப்பை அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை எனக்கூறப்படுகிறது.
மக்களுக்கு இந்த பாதிப்பு விவரம் தெரியாததால், டெங்கு பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். விழிப்புணர்வும், பாதுகாப்பும் இல்லாததாலே தற்போது மதுரையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சலுடன் மலேரியா, சிக்குன் குனியா மற்றும் பல நோய்களும் தற்போது பரவ ஆரம்பித்துள்ளன.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 6 முதல் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. தற்போது 27 டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்கள். டெங்கு தவிர மற்ற வைரஸ் காய்ச்சலுக்கு தினமும் 80 பேர் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. பொது இடங்களில் நோய் பரப்பும் பொருட்களை அகற்றவும், அது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி, மற்ற உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக கூறி வரும் நிலையில், மதுரையில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடை்நதுள்ளனர்.