சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து தீவிர புயலாக மாறுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில், மிக்ஜாம் புயல் நிலைகொண்டுள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதலே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது.
சென்னையை நெருங்கும்... - தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிச.3) காலை 5.30 மணி நிலவரப்படி புயலாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 290 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 290 கி.மீ தொலைவிலும் நிலவி வருகிறது.
தீவிரமடையும் மிக்ஜாம்: நெல்லூருக்கு தென்கிழக்கே 440 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு 550 கி.மீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை முற்பகல் வேளையில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக கடலோரப் பகுதிகளை அடையும். அதன்பின்னர், வடக்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வரும் டிச.5ம் தேதி முற்பகல் வேளையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்துக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 100 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி, வடதமிழக கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதலே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது.
முன்னதாக, வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது.சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி புயல் நகரும். வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.