தமிழகம்

புயலின்போது மின்தடை ஏற்படாமல் தடுக்க தயார் நிலையில் 15 ஆயிரம் களப் பணியாளர்கள்: தங்கம் தென்னரசு தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: புயலின்போது மின்தடை ஏற்படாமல் தடுக்கும் பணியில் 15 ஆயிரம்களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள துணைமின் நிலையத்தில் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம்காரணமாக, மின்வாரியம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

எந்த இடத்திலும் உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என முதல்வர் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்து உள்ளார். எனவே, அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த புயலின்போது மின்தடை ஏற்படாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, மின்வாரிய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவித்துள்ளோம். குறிப்பாக, மருத்துவமனைகள், குடிநீர் வழங்கல் வசதி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மின்தடை ஏற்படாமல் தடுக்க அறிவுறுத்தி உள்ளோம்.

மாநில பேரிடர் மையம் மற்றும்மாவட்ட கட்டுப்பாட்டு மையங்களில் மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 3 லட்சம் மின்கம்பங்கள், 15 ஆயிரம் கிலோ மீட்டருக்கான மின்கம்பிகள் இருப்புவைக்கப்பட்டுள்ளன. மேலும், 15 ஆயிரம் களப் பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளனர். புயலை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது. கடலோர மாவட்டங்களில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களில் மின்னுற்பத்தி பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புயலின்போது எங்காவது மின்தடை ஏற்பட்டாலும் அவை உடனுக்குடன் சரி செய்யப்படும்.பொதுமக்கள் மின்தடை குறித்துதெரிவிக்கும் புகார்கள் மீதும் உடனுக்குடன் தீர்வு காண தேவையான பணியாளர்கள் களத்தில் ஈடுபடுத்தப்படுவர். அதேபோல், புயல் கரையைக் கடக்க உள்ள திருவள்ளூர் மாவட்டத்துக்கு தேவையான களப் பணியாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். தேவையான உபகரணங்களும் இருப்பில் வைக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்விபத்துக்களை தடுக்க 94 இடங்களில் மின்சார வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT