சென்னை: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றதை தொடர்ந்து, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் சிஆர்பிஎப் வீரர்கள் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம், வழக்கை முடித்து தருவதாக கூறி லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதையடுத்து, மதுரையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திலும், அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
மதுரையை போலவே, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸார் திட்டமிட்டிருப்பதாகவும் நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதையடுத்து, சாஸ்திரி பவனில் வழக்கமாக காவல் பணியில் இருக்கும் மத்திய பாதுகாப்புப்படை போலீஸாருடன் ( சிஆர்பிஎப் ) கூடுதலாக, 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அப்போது, வாயில் கதவு உள்பக்கமாக இழுத்து பூட்டப்பட்டது. சாஸ்திரி பவன் முழுவதும் மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இரவு முழுவதும் சாஸ்திரி பவனில் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை பணிக்கு வந்தவர்களின் அடையாள அட்டையை சரி பார்த்த பிறகே, அவர்களை சாஸ்திரி பவனுக்குள் அனுமதித்தனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை மேற்கொள்ள போவதில்லை என தெரிவித்ததாக நேற்று காலை தகவல் வெளியானது. இதையடுத்து, மத்திய பாதுகாப்புப்படை போலீஸார், பாதுகாப்பு பணியை திரும்ப பெற்றுக் கொண்டு, திரும்பி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார், சாஸ்திரி பவனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 போலீஸார் இந்த பணியில் ஈடுபட்டனர். பின்னர், மீண்டும் வழக்கம்போல, வாயில் கதவு திறக்கப்பட்டு, சாஸ்திரி பவன் வழக்கமான செயல்பாடுகளை தொடங்கியது.