தமிழகம்

ராணிப்பேட்டையில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு - தடுப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுமா?

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள கொசு ஒழிப்பு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களை, மாவட்ட அளவிலான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேணடுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதேசமயம் மழை காலத்தில் நோய் பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகளிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

மழைக்காலம் என்பதால் தற்போது டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சல், இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என தமிழகம் முழுவதும் அதிகமாக பரவி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் டெங்குவாலும், 900-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்பால் அதிகளவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தாண்டில் இதுவரை மாவட்டத்தில் 4 பேர் டெங்கு பாதிப்பாலும் உயிரிழந்துள்ளனர். மக்களின் இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ளது நோய் பரப்பும் கொசுக்களே.

இவைகளை கண்டறிந்து அழிக்க அரசு சார்பில் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்களில் கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமித்துள்ளனர். அந்த வகையில் நகராட்சிகள், பேரூராட்சிகளில் வார்டு ஒன்றுக்கு ஒரு பணியாளரும், ஊராட்சிகளில் ஒரு ஒன்றியத்துக்கு 20 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கொசு ஒழிப்பு பணி மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த பணிகளுக்கும் பயன்படுத்த கூடாது என நிலையான அரசாணையும் உள்ளது. இவர்களுக்கு தினசரி ரூ.329 ஊதியமாக வழங்கப்படுகிறது. இவர்களது முக்கிய பணி கொசு ஒழிப்பு பணி.

டெங்கு காய்ச்சல், காய்ச்சல் ஏற்படும் பகுதியில் முகாமிட்டு அந்த பகுதியில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், கோயில், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். கொசுப் புழு உள்ள பெரிய தொட்டிகள், டிரம்களில் அபேட் கரைசல் தெளித்தல் உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிக்க வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளர்கள் தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை உணவு இடைவெளி விட்டு இந்த பணிகள் செய்ய வேண்டும்.

இவர்களது பணிகளை காலை முதல் மாலை வரை மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் தங்கள் பணிகளில் கவனக்குறைவாக செயல்படுகின்றனர். இதனால், பாதிப்புகளும் சற்று உயர்ந்து வருகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் மெத்தனமாக உள்ளனர். பல பகுதிகளில் பணிகளை செய்தது போல் கணக்கு காட்டி, ரசீது வைத்து ஊதியம் பெறப்படுகிறது. இந்த தகவல் குறித்து அறிந்து கொள்ள மாவட்ட சுகாதாரத்துறையினர் ஆய்வுக்கு செல்வதற்கு முன்பாகவே தகவல் அறிந்து, அன்றைய தினம் மட்டும் அனைத்து பணிகளும் முறையாக நடைபெறுவது போல், பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியாளர்கள் பெரும்பாலும் தங்களுக்கு வேண்டிய அலுவலகத்தில் டெபுடேசன் (அயல் பணி) வாங்கி அந்த அலுவலகத்தில் பணி செய்வதால், இவர்களின் பணிகளை கொசு ஒழிப்பு பணியாளர்கள், சுகாதார நிலையங்களில் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி கொசு ஒழிப்பு பணியாளர்களை கொசு ஒழிப்பு பணிகள் செய்யாமல் வேறு, வேறு பணிகள் செய்ய வைப்பதால் தான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலரும் டெங்கு மற்றும் காய்ச்சல் நோய் அதிகரித்து அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும், மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பு திட்டத்தில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒருவர் என நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ராணிப்பேட்டை துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள், கிராமங்கள் தோறும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமல்படுத்திடவும், கொசு ஒழிப்பு பணியாளர்களை மேற்பார்வை செய்யவும் நியமிக்கப்பட்டவர்கள். எனவே, கொசு ஒழிப்பு பணியாளர்களை கொசு ஒழிப்பு பணிகள் மட்டுமே செய்யவும் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் அந்தந்த பகுதிகளில் மேற்பார்வை பணிகள் செய்தால் மட்டுமே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை டெங்கு காய்ச்சல் பதிப்பு மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும். மக்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறைாக பின்பற்ற வேண்டும்.

இந்த பருவமழை காலத்தில் காய்ச்சல் பாதிப்புகளை அதிகரிப்பதை தவிர்க்க மாவட்ட சுகாதார அதிகாரிகள் டெங்கு மற்றும் காய்ச்சல் பணிகளை முறையாக கண்காணிக்கும் பணிகளை ஈடுபட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக, ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிமாறனை தொடர்பு கொண்ட போது அவர் தனது அழைப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT