தமிழகம்

“ஒரு தனிநபரின் தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையும் குறை சொல்ல முடியாது” - அண்ணாமலை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். ஒரு தனிநபரின் தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையும் குறைகூறக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இது முதல் கிடையாது, கடைசியாகவும் இருக்கப் போவதில்லை. ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி என பல மாநிலங்களில் இதுபோல் கைது நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை பொறிவைத்துப் பிடித்துள்ளனர். இவ்வாறாக பிடிக்கும் அதிகாரம் அத்துறைக்கு உள்ளது. சிக்கிய பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்குச் சொல்லிக் கொள்ளலாம். அதனால் இந்தக் கைதோ, ஊழல் தடுப்புத் துறையின் நடவடிக்கையோ நியாயமானதே. அதை மறுப்பதற்கு இல்லை.

ஆனால் ஒரு தனி மனிதர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையுமே குறை சொல்ல முடியாது. தமிழக காவல்துறையில் யாரேனும் ஒருவர் தவறு செய்தால் காவல்துறையே மோசம் என்று சொல்லிவிட முடியாது அல்லவா? அதுபோலத்தான் இதுவும். நேற்று (டிச.1) அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை தொழில்முறை பார்வையோடு அணுக வேண்டும். இதற்காக மொத்த அமலாக்கத் துறையுமே இப்படித்தான் என்று சாயம் பூச முடியாது.

ஆனால், தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள். அதனால் ஒரு தனி மனிதத் தவற்றை கட்சியோடும் தலைவர்களுடன் ஒப்பிடுகின்றனர்.தமிழகம் இப்படியான அரசியல்வாதிகளைக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது தமிழகத்தின் சாபக்கேடு அந்த சாபக்கேட்டை 2026ல் பாஜக விலக்கும்” என்றார்.

முன்னதாக நேற்று, திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்துடன் காரில் சென்ற அமலாக்கத் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திண்டுக்கல் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ஏற்கெனவே லஞ்சமாக பெற்ற ரூ.20 லட்சத்தில் சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் சிலருக்கும் அன்கித் திவாரி பிரித்துக் கொடுத்துள்ளார் என்று தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் வேறு அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும், அவருக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT