காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்காக, வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெறக்கோரி ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை நேற்று பள்ளிக்கு அனுப்பாமல், காலவரையற்ற பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 2-வது பசுமை விமான நிலையத்தை 5,476 ஏக்கர் பரப்பில் அமைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, நீர்நிலைகள், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 494-வது நாட்களாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விமான நிலையத்துக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்த கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த, அரசாணையை திரும்பப் பெறக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்தனர். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முதல் ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பாமல், காலவரையற்ற பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏகானபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 117 மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட வகுப்பறைகளில், ஆசிரியர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர்.
பள்ளி ஆசிரியர்கள் கிராமத்துக்குச் சென்று பிள்ளைகளை பள்ளிக்குஅனுப்புமாறு பெற்றோர்களிடம் கூற கல்வித் துறை அதிகாரிகள் வலியுறுத்தியதாக, ஆசிரியர்கள் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், “அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் பள்ளி புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும். மேலும், பிள்ளைகளின் கல்வி அவசியத்தைக் கருதி கிராமத்தில் உள்ள இளைஞர்களின் மூலம் கல்வி கற்பிக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். கல்வி பயிலும் பிள்ளைகளுக்குத் தேவையான உணவும் வழங்கப்படும்” என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.