சென்னை: போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக வரும் 4, 5 ஆகிய தேதிகளில் ஊழியர்களிடையே பிரச்சாரம் செய்வது என தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துதல், ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் பணப்பலன்களை உடனடியாக வழங்குதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆகிய கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன.
இவற்றை உள்ளடக்கி, வரும் டிச.4, 5 தேதிகளில் அனைத்து பணிமனைகளிலும் அதிகாலை முதல் பணிக்கு வரும் தொழிலாளர்கள் மத்தியில் கூட்டமைப்பு சார்பில் சங்க நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத பட்சத்தில் வரும் 19-ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.