கோப்புப்படம் 
தமிழகம்

மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வித் துறை மாற்று நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவதில் நிலவும் குழப்பங்களை தவிர்க்க மாற்று நடவடிக்கைகள் பள்ளிக்கல்வித் துறை எடுக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எடுக்கும் நடைமுறை தற்போது அமலில் இருக்கிறது. அதன்படி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை, மழைப் பாதிப்புகள் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையின்படி பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய விடுமுறை தினங்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்தசூழலில் நடப்பாண்டு மழை காலங்களில் விடுமுறை விடுவதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படுகின்றன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு சர்ச்சையானது. இதனால் பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வித் துறை அலுவலர்கள் அதிருப்தி அடைந்தனர்.

அதேபோல், நேற்று கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை தரப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய சில பகுதிகளும் வருகின்றன. இதனால்அந்தப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த சிக்கல்களை சரிசெய்வதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT