சேலம்: அதிமுகவைப் பொறுத்தவரை சாதி, மத வேறுபாடுகள் கிடையாது. அனைவரும் சமம்தான் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
பல்வேறு கட்சிகளில் இருந்துவிலகிய முஸ்லிம்கள் ஏராளமானோர், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார். இதில் பழனிசாமி பேசியதாவது:
திமுக ஆட்சியில் விலைவாசி 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளதால், நடுத்தர மற்றும் ஏழைமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
மக்கள் மீது அக்கறை இல்லாத முதல்வர் ஸ்டாலின், தனது குடும்பத்தினர் நலனுக்காக மட்டுமேஉழைக்கிறார். தனது மகனை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த முயற்சிக்கிறார். உதயநிதியை தமிழக முதல்வராக்கும் ஸ்டாலினுடைய எண்ணம் பலிக்காது. குடும்ப கட்சி ஆட்சியால் மக்களுக்கு நன்மை கிடைக்காது.
சூழ்நிலை காரணமாக... சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகபாஜகவுடன் அதிமுக கூட்டணிவைக்க நேர்ந்தது. திமுக ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. பாஜக அமைச்சரவையில் திமுகவினர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், ஆட்சி முடிந்தவுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு திமுக மாறிவிட்டது.
திமுகவில் கட்சிப் பதவி, ஆட்சிப் பதவிக்கு ஸ்டாலின் குடும்பத்தினரை தவிர, வேறு யாராலும் வர முடியாது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக வரும் மக்களவைத் தேர்தல் அமையும்.
அதிமுகவைப் பொறுத்தவரை சாதி, மத வேறுபாடுகள் கிடையாது. அனைவரும் சமம்தான். அதிமுக அவைத் தலைவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர். திமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகளில் ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை.
அதிமுக-பாஜக கூட்டணிமுறிந்துவிட்டது. தேசிய ஜனநாயககூட்டணியில் இருந்து விலகியதைபலமுறை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். இதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இஸ்லாமிய மக்களுக்காக அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே கட்சி அதிமுகதான்.
இவ்வாறு அவர் பேசினார்.