யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி முரளி பேச்சுவார்த்தை நடத்தினார். 
தமிழகம்

யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு - தே.கோட்டையில் உடலை வாங்க மறுத்து போராட்டம்

செய்திப்பிரிவு

ஓசூர்: அஞ்செட்டி அருகே யானை தாக்கி இளைஞர் உயிரிழப்புக்கு வனத்துறை யின் கவனக்குறைவு காரணம் எனக் கூறி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ மனையில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேன்கனிக்கோட்டையிலிருந்து, அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள மரக்கட்டா பகுதியில் நேற்று முன்தினம் இரு குழுக்களாக யானைகள் சுற்றின. தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் சாலையில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி, யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினர்.

பின்னர் இச்சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அஞ்செட்டியைச் சேர்ந்த அருள்குமார் (23) என்பவர் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சாலையைக் கடக்க முயன்ற போது, யானை தாக்கியதில் உயிரிழந்தார். இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போது, அங்கு திரண்ட அருள்குமாரின் உறவினர்கள், “வனத்துறையினர் கவனக்குறைவே அருள் குமார் உயிரிழப்புக்குக் காரணம்” எனக் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன், டிஎஸ்பி முரளி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, அருள்குமாரின் உடலை வாங்கிச் சென்றனர். இதனிடையே, வனத்துறை சார்பில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, “அஞ்செட்டி சாலையில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் உள்ளது. சாலையைக் கடக்கும்போது, திடீரென சாலையோர மறைவுகளிலிருந்து யானைகள் குறுக்கிடுகின்றன. எனவே, இச்சாலையில் யானைகள் நட மாட்டத்தைக் கண்காணிக்கக் கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்களை நியமிக்க வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT