மழை 
தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் ஆங்காங்கே மழை பெய்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிச.2 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும். அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை உட்பட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 19 செ.மீ. மழையும், சென்னை கொளத்தூர், திரு.வி.க நகர் , திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தலா 15 செ.மீ. மழையும், சென்னை, அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

செம்பரம்பாக்கம் நீர் திறப்பு குறைப்பு: தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவ மழையால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 6,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT