சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சென்னையில் தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகத்தில் தொடர்ச்சியாக வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனைகள் நடந்து வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து, ஜூலை மாதத்தில் செம்மண் குவாரி வழக்கில் அமைச்சர் பொன் முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டிலும், அத னை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று சென்னையில் தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது.
சென்னை புரசைவாக்கம் பிரிக்கிள்ன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அமித் என்பவர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது. அரசு ஒப்பந்தங்களுக்கு மின்சாதன பொருட்களை விநியோகித்து வரும் அமித், பொதுப்பணித் துறைக்கு மின்சார பொருட்களை சப்ளை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.
அதில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் ஏதேனும் முதலீடு செய்துள்ளாரா என்பது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதேபோல், இவரது வீட்டுக்கு அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர்கள், சகோதரர்களான ரமேஷ் குமார் ஜெயின், மகேந்திரா ஜெயின் ஆகியோரது வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
இவர்கள் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக இங்கு சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதேபோல், நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த முத்து நாராயண ரெட்டி என்பவரது வீட்டிலும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இரவு வரை நீடித்த இந்த சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகு தான் முழுவிவரங்கள் வெளியிட முடியும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.