கரூர் திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா (45). இவர் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் திருமாநிலையூர் பகுதியில் குறுகிய சந்துப்பகுதியில் யாரும் குடியில்லாத பாழடைந்த வீடுகளுக்கு உள்பகுதியில் சாயப்பட்டறையை ஒரு மாத காலமாக நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த சாயப்பட்டறையிலிருந்து வெளியேறிய கழிவுநீர் ராஜா வாய்க்காலில் சென்றுள்ளது. இதுகுறித்து நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சேரலாதன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கரூர் திருமாநிலையூர் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறை குறித்து தெரியவந்தது.
எனவே, அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறையை இடிப்பதற்காக சனிக்கிழமை பொக்லின் வரவழைக்கப்பட்டது. குறுகிய சந்தாக இருந்ததால் பொக்ளின் உள்ளே செல்லமுடியாததால் ஆள்களை வைத்து சாயப்பட்டறையில் சாயமிட கட்டப்பட்டிருந்த தொட்டி இடிக்கப்பட்டு, அங்கிருந்த பொருள்களும் அகற்றப்பட்டன.
அனுமதியின்றி சாயப்பட்டறை நடத்தி, சாயக்கழிவு நீரை ராஜா வாய்க்காலில் வெளியேற்றியவர் மீது காவல்துறையில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றுச்சூழல் பொறியாளர் சேரலாதன் தெரிவித்தார்.