திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவில் தூய்மைப் பணியாளர்களின் ‘மகத்தான’ பணியால் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை தூய்மையாக காட்சியளிக்க தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 26-ம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும் மற்றும் 2,668 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதையொட்டி, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் மற்றும் 14 கி.மீ. கிரிவலம் சென்று வழிபட்டனர். கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி நாட்கள், மகா தேரோட்டம் உட்பட கடந்த இரண்டு வாரமாக, 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்,திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர். பக்தர்களின் வருகையையொட்டி திருவண்ணாமலை நகரம், கிரிவலப் பாதையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள், 59 கார் நிறுத்தும் இடங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி என நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் என மொத்தம் 3,225 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், இரவு பகல் பாராமல் பக்தர்கள் வீசிய குடிநீர் பாட்டில், நெகிழி பொருட்கள், 200-க்கும் மேற்பட்ட அன்னதான கூடங்களில் சேகரித்து வைக்கப்பட்ட வாழை இலை, பாக்கு மட்டைகள் உள்ளிட்ட உணவு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மகா தீப நாள் முதல், அவர்களது பணி தொய்வின்றி நடைபெறுகிறது.
இதுவரை சுமார் 12 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படு கிறது. இவர்களது பணி மேலும் ஓரிரு நாட்கள் தொடரும் என தெரிகிறது. தூய்மைப் பணியாளர்களின் மகத்தான பணி எதிரொலியாக கிரிவலப் பாதை மற்றும் நகரம் முழுவதும் தூய்மையாக காட்சியளிக்க தொடங்கிஉள்ளன. கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பலர் பணியாற்றி இருந்தாலும், தூய்மைப் பணியாளர்களின் பணியானது போற்றுதலுக்குரியது. அவர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு ஊதியம் மட்டுமின்றி சன்மானம் வழங்கவும் முன்வர வேண்டும். மேலும், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அழைத்து சென்று பிரசாதம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்