நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ஐ.ஜி. பிரமோத்குமார். 
தமிழகம்

ரூ.2.50 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு: ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றச்சாட்டு பதிவு

செய்திப்பிரிவு

கோவை: திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ நிதி நிறுவனம், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) இந்த வழக்கை விசாரித்து, நிறுவன இயக்குநர்களுக்கு சிறைத் தண்டனை விதித்தது.

இதற்கிடையில், நிதி நிறுவன இயக்குநர்களைக் காப்பாற்றுவதற்காக ரூ.2.50 கோடி லஞ்சம் பெற்றதாக, அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது கரூரில் உள்ள செய்தித்தாள் காகித நிறுவனத்தில் தலைமை கண்காணிப்பு அதிகாரியாகப் பணியாற்றும் ஐ.ஜி. பிரமோத்குமார் உள்ளிட்ட 5 பேரும் ஆஜராகினர். இதையடுத்து, அவர்கள் மீதானகுற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

பின்னர், இந்த வழக்கின் சாட்சி விசாரணைக்கான பட்டியலை டிசம்பர் 8-ம் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று சிபிஐ-க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT