குன்றத்தூர்/ திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அந்த ஏரிகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 452 கன அடியாக உள்ளது.
ஆகவே, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள ஏரியின் நீர் இருப்பு 3,195 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 22.29 அடியாகவும் உள்ளது. ஆகவே, நீர் மட்டம் 23 அடியை நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஏற்கெனவே விநாடிக்கு 25 கன அடி என வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவு நேற்று காலை 10 மணியளவில் விநாடிக்கு 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், தற்போது ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக வெளியேற்றப்படும் இந்தஉபரி நீரின் அளவு அதிகரிக்கப்படும்.
உபரி நீர் செல்லும் கால்வாய் கரையோர கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை, அடையாறு ஆற்றின் கரையின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 663 கன அடியாக உள்ளது. இதனால், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு, 2,829 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 19.08 அடியாகவும் இருக்கிறது.
பூண்டி ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 700 கன அடியாக உள்ளது. எனவே, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர் இருப்பு, 1,943 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 30.85 அடியாகவும் உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 231 கன அடியாக இருக்கிறது. ஏரியின் நீர் இருப்பு 762 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 16.34 அடியாகவும் இருக்கிறது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு, 36.61 அடி உயரம் உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 80 கன அடியாக உள்ளது. ஏரியின் நீர் இருப்பு 446 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 35 அடியாகவும் உள்ளது.