தமிழகம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் சந்திர பிரியங்கா திடீர் சந்திப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் பதவி யில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா நேற்று மாலை திடீரென முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இக்கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக உள்ளார். அவரது அமைச்சரவையில் பெண் அமைச்சராக அவரது கட்சியைச் சேர்ந்த சந்திர பிரியங்கா இடம் பெற்றிருந்தார். கடந்த அக்டோபர் மாதம் அமைச்சரவையிலிருந்து சந்திர பிரியங்காவை நீக்க முதல்வர் ரங்கசாமி துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார்.

அதையறிந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சந்திர பிரியங்காவின் பதவி நீக்கம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்நிலையில், அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்துக் கோரி காரைக்கால் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியானது. இச்சர்சைகளின் போது முதல்வரை அவர் சந்திக்கவில்லை.

இந்த நிலையில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா நேற்று மாலை புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டில் அவரைச் சந்தித்து பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. சந்திர பிரியங்கா பதவி நீக்கப்பட்ட பிறகு, அவரது துறைக்கு புதிய அமைச்சர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்தநிலையில், சந்திர பிரியங்கா முதல்வரைச் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT