விருதுநகர்: மத்திய நிதியமைச்சர் பங்கேற்ற விழாவுக்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தொகுதி எம்.பி.க்கள் அழைக்கப்படாதது தவறான அரசியல் முன்னுதாரணம் என அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விருதுநகரில் கடந்த 19-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 1,247 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1.71 கோடி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மத்திய நிதிச் சேவைகள் துறைச் செயலர் விவேக் ஜோஷி, மத்திய நிதித்துறை இணைச் செயலர் பர்ஷாந்த்குமார் கோயல், இயக்குநர் கோலக்பிஹாரி பாண்டா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கித் தலைவர் சஞ்சய் விநாயகம், வங்கியின் செயல் இயக்குநரும் நிதிச் சேவைகள் துறை இயக்குநருமான சுஷில்குமார் சிங், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இயக்குநர் விபின்பால் மற்றும் வங்கி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, தென்காசி எம்பி தனுஷ்குமார் ஆகியோர் அழைக்கப்படவில்லை. விழா அழைப்பிதழில் எம்பிக்களின் பெயர்களும் இடம் பெறவில்லை. இந்த 3 எம்பிக்களும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்.
மக்களவைத் தலைவருக்கு கடிதம்: இதுதொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவுக்கு விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதினார். அதில் எம்பிக்களின் பெயர்களைப் புறக்கணிப்பது ஜனநாயக பிரதிநிதித்துவக் கொள்கைகளுக்கு முரணானது.மக்கள் பிரதிநிதிகளின் கண்ணியத்தைக் காப்பாற்றவும், ஜனநாயக ஒருமைப்பாட்டைப் பேணவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன் என குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து இப்புகார் தொடர்பாக 15 நாட்களுக்குள் மத்திய நிதித்துறை செயலரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகமும் பதில் அளிக்க வேண்டும் என மக்களவை துணை செயலர் பாலகுரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொகுதி எம்பி, எம்எல்ஏ என்ற முறையில் விழாக்களுக்கு அழைக்கப்படுவது உண்டு. ஆனால், அந்த எம்பி, எம்எல்ஏக்கள் கலந்துகொள்வதில்லை. மேலும், மத்திய அரசு விழாக்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில்கூட கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்பி.எல்ஏக்களுக்கும் இன்று வரை அழைப்பு விடுக்கப்படுகிறது. ஆனால், விருதுநகரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் எம்பிக்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப் பினர். இது தவறான முன்னுதாரணம். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்று கூறினர்.
மரபு மீறப்பட்டுள்ளது: இதுகுறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறுகையில், மத்திய நிதியமைச்சர் விழாவில் இதுவரை இருந்த மரபு மீறப்பட்டுள்ளது. இது வரை இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை. ஆளும் கட்சி நடத்தும் எந்த விழாவுக்கும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அந்தத் தொகுதி எம்எல்ஏ எம்பிக்கள் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் விருதுநகரில் மத்திய நிதி அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் எம்பிக்கள் புறக்கணிக்கப்பட்டது யார் எடுத்த முடிவு என்பது தெரியவில்லை. இதேபோன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற மத்திய நிதி அமைச்சர் பங்கேற்ற விழாவிலும் அத்தொகுதி எம்பி புறக்கணிக்கப்பட்டுள்ளார். எந்த அரசியல் கட்சியும் இதுவரை இது போன்று வரம்பு மீறியது இல்லை. இது ஆரோக்கியமான அரசியல் இல்லை என்றார்.
இது குறித்து அரசியல் பிரமுகர்கள் கூறிய தாவது: அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை். இன்று எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் நாளை ஆளுங்கட்சியாக மாறுவது காலத்தின் இயல்பு. ஆளும் கட்சி நடத்தும் அரசு விழாவில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் விழா அழைப்பிதழில் குறிப்பிடப்படுவது வழக்கம். அதோடு, விழாவில் பங்கேற்க முறைப்படி அழைக்கப்படுவதும் வழக்கம். விருதுநகரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்த மரபு மீறப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமானது இல்லை. மத்திய அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி என்பதால் எம்.பி.களுக்கும் அதில் பங்கேற்கும் உரிமை உண்டு. ஆனால் விருதுநகர் மாவட்டத்துக்குட்பட்ட 3 எம்.பி.க்களுக் கும் இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது கண் டனத்துக்குரியது என்று தெரிவித்தனர்.