பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 பேர் சிக்கி பரிதவித்தனர். அவர்களை மலை கிராம மக்கள் கயிறு கட்டி மீட்டனர்.
பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த வாரம் தொடர் மழை பெய்தது. இதனால் கல்லாறு, வராகநதி, பாம்பனாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தது. கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் இந்த ஆறுகளில் நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் மலைக் கிராம மான சின்னூர் பகுதியில் கோயில் திருவிழா தொடங்கியது.
இதற்காக இந்த ஊரைச் சேர்ந்த ராமன் (55) என்பவர் பெரியகுளத்தில் உள்ள தனது மகள் அம்பிகா, பேரன்கள் குமரன், ரித்திக், தினேஷ் ஆகியோரை அழைத்து வந்து கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கல்லாற்றை கடந்த போது திடீரென நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அச்சம் அடைந்த அவர்கள், ஆற்றின் மையத்தில் இருந்த பாறையில் நின்று கொண்டனர்.
தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால் 2 மணி நேரம் அப்பகுதியிலேயே நின்றபடி பரிதவித்தனர். இது குறித்து உறவினர்களுக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு மலைக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் திரண்டு வந்தனர். பின்னர் இளைஞர்கள் கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டனர்.