உயிரிழந்த அமராவதி 
தமிழகம்

திருவாரூர் | அரசு மருத்துவமனையில் மின்வெட்டால் பெண் உயிரிழப்பு? - நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் விசாரணை

செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வென்டிலேட்டர் கருவிக்கு மின்சாரம் தடைபட்டதால் பெண் ஒருவர் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரிமுதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் சிவனாரகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி அமராவதி (48). மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் காச நோய் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக நவ.25-ம்தேதி அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது ரத்தத்தில் நுண்கிருமி கலந்து ஆபத்தான நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வென்டிலேட்டர் கருவி: இதையடுத்து, சுவாசிப்பதற்கு சிரமப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. இருப்பினும் அவர்நேற்று முன்தினம் பிற்பகல் 3.50 மணியளவில் உயிரிழந்தார். இதற்கிடையே, மருத்துவ மனையில் மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் கருவி செயலிழந்து அமராவதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: மின்சாரம் தடை ஏற்பட்டு, 6 முதல்7 நிமிடங்களுக்குள் மீண்டும் மின்சாரம் வந்துவிட்டது. இதற்கும், பெண்ணின் உயிரிழப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.எனினும், இந்தச் சம்பவம்தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் இந்தக் குழுவினர் விசாரணைநடத்தி அறிக்கை அளிப்பார்கள். அதன்பிறகு உரிய விளக்கம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT