தமிழகம்

3 ஆண்டு காலத்துக்கு செயல்படும் சீர்மரபினர் நலவாரியம் திருத்தியமைப்பு: தமிழக அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு சீர்மரபினர் நலவாரியத்தை திருத்தியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சீர்மரபினர் வகுப்பினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக "சீர்மரபினர் நல வாரியம்", 2007-ம் ஆண்டில் அரசால் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நல உதவித் திட்டங்கள் போன்று விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய உதவிகள் வழங்கப்படுகின்றன. தற்போது, சீர்மரபினர் நல வாரியத்துக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைவராகவும், ராசா, அருண்மொழி ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்கள் 13 பேர்: அத்துடன் கே.எஸ். ராஜ்கவுண்டர், சேகர், பசுவை சக்திவேல், முனுசாமி, எஸ். கணேசன், கே.எஸ். கண்ணன், கதிர்வேல், பண்ணப்பட்டி கோவிந்தராஜ், ப.சந்திரன், சூர்யா பி.தங்கராஜா, பெரி.துரைராசு, பாண்டீஸ்வரி மற்றும் பெரியசாமி ஆகிய 13 பேரை அரசுசாரா உறுப்பினர்களாக நியமித்து 3 ஆண்டு காலத்துக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT