சென்னை: மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து 2-வது நாளாக சென்னையில் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய பாஜகஅரசு துரோகம் இழைத்து வருவதாகக் கூறி, அதை கண்டித்தும், 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்திருந்தது. இந்நிலையில், 2நாள் தொடர் போராட்டம் நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் தொடங்கியது.
தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி. தலைமையில், ஐக்கிய விவசாயிகள்முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், 2-வது நாளாக நேற்று முற்றுகை போராட்டம் தொடர்ந்தது. இதில் 11 மத்திய தொழிற் சங்கங்கள், மாநில தொழிற் சங்கங்கள், சம்மேளனங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், காஸ் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். மூத்த குடிமக்கள், பெண்கள்,மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான பறிக்கப்பட்ட ரயில்வே சலுகையை திரும்பவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உரையாற்றினர்.
இந்த முற்றுகை போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம், பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) தலைவர் குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஜு கிருஷ்ணன், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன், ஏஐடியூசி சங்கத்தின் டி.எம். மூர்த்தி, எச்எம்எஸ் சங்கத்தின் ராஜா ஸ்ரீதர், ஐஎன்டியூசி சங்கத்தின் சேவியர் உள்ளிடோர் பங்கேற்றனர்.