தமிழகம்

மாநகராட்சி சார்பில் சென்னை முழுவதும் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி திட்டம் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கடந்த வாரம் ராயபுரம் பகுதியில் வெறி நோயால் (Rabies) பாதிக்கப்பட்ட நாய் ஒன்று 28 பேரை கடித்தது. இந்நிலையில் சென்னை முழுவதும் உள்ள தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, அக மற்றும் புற ஒட்டுண்ணி நீக்க மருந்துகள் வழங்கும் திட்டம் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட 49-வது வார்டில் நேற்று தொடங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியது: நாய்களுக்கு ஏற்படும் வெறிநோயை முற்றிலும் தடுக்க அதற்கான தடுப்பூசியை அனைத்து நாய்களுக்கும் செலுத்த வேண்டும் எனஉலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. 2018 அக்டோபரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னையில் 57 ஆயிரத்து 366 தெரு நாய்கள் இருந்தன. 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் 68 ஆயிரத்து 577 நாய்கள் பயனடைந்தன. இதன்மூலம் தெருநாய்களுக்கும், பொதுமக்களுக்கும் வெறிநோய் பாதிப்பு வராமல் தடுக்கப்பட்டது.

மீண்டும் அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. நாய்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளது, அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் என தற்போது சென்னையில் 93 ஆயிரம் நாய்கள் இருக்கும் என உத்தேசிக்கப்பட்டுஉள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு குழுவிலும் ஒரு கால்நடை மருத்துவர், 4 தெருநாய் பிடிக்கும் பணியாளர்கள், இரு உதவியாளர்கள், ஒரு வாடகை வாகனம் மற்றும் ஓட்டுநர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் தினமும் 130 நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 7 குழுக்களும் தினமும் 910 நாய்களுக்கு தடுப்பூசி போடவும், இப்பணிகளை 120 நாட்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டள்ளது. இத்திட்டத்தில் தெரு நாய்களை அவை வசிக்கும் தெருக்களுக்கு சென்று பிடித்து, வெறிநோய் தடுப்பூசி, அக, மற்றும் புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்படும். வண்ண சாயம் பூசி அடையாளப்படுத்தி, அதே இடத்தில் விடுவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT