படம்: ச.கார்த்திகேயன்

 
தமிழகம்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,160 அதிமுகவினர் பதவியை ராஜினாமா செய்தனர்

தொண்டர்களாக நீடிப்பதாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,160 அதிமுகவினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். அதைத் தொடர்ந்து சி.வி.சண்முகம் அணியில் இருந்த 17 மாவட்டச் செயலாளர்களின் பதவியை பறித்த பழனிசாமி, புதிய மாவட்டச் செயலாளர் களை நியமித்தார்.

பின்னர் சி.வி.சண்முகம் தரப்பு மன்னிப்பு கடிதம் அளித்த நிலையில், அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை மீண்டும் தராமல், மாநில நிர்வாகி பொறுப்புகள் வழங்கப்பட்டன.

இதை சி.வி.சண்முகம் தரப்பு ஏற்காமல், முன்னாள் அமைச்சர்கள் 9 பேர், தங்களுக்கு புதிய பதவிகள் வேண்டாம், தொண்டர்களாகவே தொடர்கிறோம் என பழனிசாமிக்கு கடிதம் எழுதினர்.

இந்நிலையில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பொ.அர்ஜூனன் தலைமையில் 1,160 பேர், அதிமுகவில் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளை ராஜினாமா செய்யும் கடிதத்துடன், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்து, கடிதங்களை நினைவிடத்தில் வைத்து வணங்கினர்.

பின்னர், அந்த கடிதங்களை தலைமை அலுவலகத்தில் வழங்கினர். இது தொடர்பாக அர்ஜூனன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ பழனிசாமி தனது சுயநலத்துக்காக அதிமுகவை அழித்து வருகிறார்.

கட்சிக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்களை, கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, தகுதி இல்லாதவர் களுக்கு பொறுப்புகளை வழங்கிவருகிறார். அவர்களுடன் நாங்கள் பயணிக்க விரும்பவில்லை. ஆனால், ஒருபோதும் அதிமுகவைவிட்டு விலகமாட்டோம், தொண்டர்களாகவே தொடர் வோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT