ஈரோடு / ஓசூர்: ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மின்சாரம் பாய்ந்ததில், இரு பெண் யானைகள் உயிரிழந்தன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச் சரகங்கள் உள்ளன. இவற்றின் அருகேயுள்ள விவசாய நிலங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், விலங்குகள் வருவதை தடுக்க, விளை நிலங்களைச் சுற்றிலும் பேட்டரியில் இயங்கும் மின்வேலி அமைத்துள்ளனர்.
இந்நிலையில், தாளவாடி அருகேயுள்ள இக்காலூரைச் சேர்ந்த மாதேவசாமி என்பவரது தோட்டத்தில் நேற்று அதிகாலை பெண் யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத் துறையினர் யானையின் உடலை மீட்டு, விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக வனத் துறை அதிகாரிகள் கூறும்போது, “வன விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படாதபடி பேட்டரியில் இயங்கக் கூடிய மின்வேலி அமைக்க மட்டுமே வனத் துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால், மாதேவசாமி தோட்டத்தில் மின் வேலியில் உயர் அழுத்த மின்சாரம் செலுத்தியதே யானையின் உயிர்இழப்புக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது” என்றனர். தொடர்ந்து, மாதேவசாமி உள்ளிட்டசில விவசாயிகளிடம் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்வயரை கடித்ததால்...: கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வன உயிரியல் பூங்காவிலிருந்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச் சரகத்துக்கு இடம் பெயர்ந்தன.
இந்த யானைகள் இரு குழுக்களாகப் பிரிந்து தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள நொகனூர் மற்றும் சானமாவு காப்புக் காட்டில் சுற்றி வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நொகனூர் காப்புக் காட்டிலிருந்த 10 யானைகள் தாவரக்கரை பகுதிக்கு இடம்பெயர்ந்து, அங்குள்ள விளை நிலத்தில் புகுந்தன.
அப்போது, அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணை அருகேஆழ்துளைக் கிணற்றுக்கு உரியபாதுகாப்பின்றி அமைக்கப்பட்டிருந்த மின் வயரை 8 வயது பெண்யானை கடித்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. தகவலறிந்து சென்ற வனத் துறையினர் யானையின் உடலை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்டியை ஈன்றபோது உயிரிழப்பு" கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி அருகே உளிபண்டா வனப் பகுதியில் நேற்று காலைகுட்டியை ஈன்றபோது பெண் யானை உயிரிழந்தது. தகவலறிந்து வந்த வனத் துறையினர் குட்டி யானையை மீட்டு, கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்தனர்.
உயிரிழந்த யானையின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், அடக்கம் செய்யப்பட்டது.