அடையாறு திரு.வி.க.பாலம் அருகே விபத்தில் சிக்கிய அரசு பேருந்து தடுப்பு வேலியை தாண்டி எதிர் திசையில் பாய்ந்தது. 
தமிழகம்

அடையாறு திரு.வி.க பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து விபத்தில் சிக்கியது: எதிர் திசையில் பாய்ந்ததால் பரபரப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அடையாறு திரு.வி.க பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர். பெரம்பூரிலிருந்து பெசன்ட் நகர் நோக்கி அரசு பேருந்து நேற்று சென்றுகொண்டிருந்தது. மதியம் 12.30 மணியளவில் அடையாறு திரு.வி.க பாலம் அருகே செல்லும்போது அப்பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கண் இமைக்கும் நேரத்துக்குள் சாலை தடுப்பை உடைத்து எதிர் திசையில் பாய்ந்தது. அந்ந நேரத்தில் அந்த பகுதியில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையில், தகவல் அறிந்து அடையாறுபோக்குவரத்து புலனாய்வு பிரிவுபோலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.விபத்தில் சிக்கிய பேருந்தில் உள்ளே இருந்த 20 பயணிகள் பத்திரமாக மீட்டு வேறு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்தை உடனடியாக வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தினர். பிரேக் பிடிக்காததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தை நேரில் பார்த்த ரவி என்பவர் கூறுகையில், ‘கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வலதுபுறம் திரும்பியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார்’ என்றார்.

SCROLL FOR NEXT