சென்னை: தமிழக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டு பால் உற்பத்தியில் உலகளவில் இந்தியா தன்னிறைவு அடைந்த நாடாக முதலிடத்தில் திகழ காரணமாக இருந்தவர் டாக்டர் வர்கீஸ் குரியன். இவர், "பால்வளத் துறையின் தந்தை" என்றழைக்கப்படுகிறார். இவரது பிறந்த நாளான நவ.26-ம் தேதி ஆண்டுதோறும் இந்திய அளவில் தேசிய பால் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தனது பால் பாக்கெட்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தேசிய பால் தின வாழ்த்துச் செய்தி வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால், ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 2022-ம் ஆண்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசிய பால் தினம் வாழ்த்துச் செய்தியை வெளியிடாமல் புறக்கணித்திருந்தது. இந்நிலையில், நடப்பாண்டிலும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் "தேசிய பால் தினம்" வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் ஆவின் நிர்வாகம் மீண்டும் புறக்கணித்திருக்கிறது. அதனால் ஆவின் நிர்வாகத்தை எங்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அனைத்து மத பண்டிகைகளுக்கும் தவறாமல் வாழ்த்துச் செய்தி வெளியிடும் ஆவின் நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய தேசிய தினங்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்தது. அந்த வரிசையில், தற்போது தேசிய பால் தினத்தையும் ஆவின் நிர்வாகம் சேர்த்திருக்கிறது. தேசிய பால் தினத்தை புறக்கணித்தமைக்காக தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் தமிழக மக்களிடம், குறிப்பாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதுபோன்று இனி நடக்காமல் பார்த்து கொள்ள ஆவின் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.