தமிழகம்

மீண்டும் புத்துயிர் பெறுமா சிற்றுந்து சேவை? - கிராம மக்கள் எதிர்பார்ப்பு

வி.சீனிவாசன்

சேலம்: கிராமப் பகுதி மக்களுக்கான போக்குவரத்து சேவையை மையப்படுத்தி நகரப் பகுதிகளில் இருந்து சிற்றுந்து சேவையை அதிகரித்து புத்துயிர் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 1996-2001-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, கிராமப்புற மக்களின் போக்குவரத்தை எளிதாக்க வேண்டி சிற்றுந்து சேவையை அறிமுகம் செய்து வைத்தார். நகரப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமப்புற மக்கள் தொழில்ரீதியாகவும், வேலைக்குச் சென்று வரவும், பள்ளி, கல்லூரி குழந்தைகள் கல்வி கற்கவும் சிற்றுந்துகளை அதிகளவு பயன்படுத்தி பலன் அடைந்து வந்தனர். அரசுப் பேருந்து நேரடியாக இயக்க முடியாத தொலை தூரக் கிராமப் பகுதிகளுக்கும் சிற்றுந்து சேவை மிகவும் பயனளித்து வந்தது. கிராமப் பகுதிகளில் 20 கிலோ மீட்டர் தூரம் வரை சிற்றுந்து சேவை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது சிற்றுந்து சேவை பல கிராமங்களில் நிறுத்தப்பட்டதால், பெண்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்குச் சென்று வரும் முதியவர்கள், விவசாய பொருட்களை விற்பனை செய்ய நகரப் பகுதிக்கு வந்து செல்லும் விவசாயிகள் பலரும் பெரும் போக்குவரத்து சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். காலப்போக்கில் சிற்றுந்து சேவை குறைக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சிற்றுந்து சேவையை அதிகரிக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சிற்றுந்து சேவையை பயன்படுத்தி வந்த கிராம மக்கள் கூறியது: கடந்த 1996-2000-ம் ஆண்டு காலத்தில் தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் சிற்றுந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால், தற்போது, மாநிலம் முழுவதும் 800-க்கும் குறைவான வழித்தடங்களில் மட்டுமே சிற்றுந்து சேவை தொடர்கிறது. சிற்றுந்து உரிமம் பெற்று நடத்தி வந்த பலரும் சிற்றுந்து சேவையை இயக்காமல் கைவிட்டு விட்டனர்.

சேலம் மாநகரில் இருந்து கிச்சிப்பாளையம், எருமாபாளையம் பகுதி வழித்தடத்தில் மட்டுமே சிற்றுந்து சேவை இருக்கிறது. சேலம் மாநகரை சார்ந்து அயோத்தியாப்பட்டணம், கன்னங்குறிச்சி, சிவதாபுரம், இரும்பாலை, மல்லூர் உள்பட பல கிராம பகுதிகள் உள்ளன. அதே போல, எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், கெங்கவல்லி, ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட தாலுகா பகுதிகளிலும் கிராம மக்கள் அருகாமையில் உள்ள நகரைச் சார்ந்த பகுதிக்குச் சென்று வர சிற்றுந்து சேவையானது பலரின் போக்குவரத்துக்கு வசதியாக இருந்தது. கிராம மக்களின் பொருளாதார மேம் பாட்டுக்கும், குழந்தைகளின் கல்வி சேவைக்கும் சிற்றுந்துகள் பேருதவியாக இருந்து வந்தது.

தற்போது, சிற்றுந்து சேவைகள் குறைந்ததால், கிராமப் பகுதிகளில் இருந்து நகரப் பகுதிக்கு வரும் மக்கள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தற்போதைய திமுக அரசு சிற்றுந்து சேவையை விரிவுபடுத்தி, இத்திட்டத்துக்கு புத்துயிர் வழங்க வேண்டும். அதேபோல, 20 கிமீ.,தொலைவுக்கான சிற்றுந்து சேவை இயக்குவதற்கான கிலோ மீட்டர் தூரத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து அதிகரித்து தர வேண்டும். இதன் மூலம் நகரப் பகுதியுடனான கிராம மக்களின் போக்குவரத்துக்கு இணைப்பு பாலமாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT