தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்.படம்: ஆர்.வெங்கடேஷ் 
தமிழகம்

தமிழக அரசை கண்டித்து ஜன.1 முதல் பிரச்சாரம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விவசாயிகள் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல், விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதி வழங்கியது கண்டிக்கத்தக்கது. இதேபோல, சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்தும் பெயரில் திமுக அரசு சட்ட விரோதமாக போலீஸாரை பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது.

குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து மிரட்டுகிறது. விவசாயிகளை சிறையில் வைத்து கொடுமைப்படுத்துகிறது. இதற்கு அடிப்படை, நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 தான். திமுக அரசின் கொடுமைகளை எதிர்ப்பது என்ற கொள்கையை முன்னெடுக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளோம். விவசாயிகளான எங்களுக்கு அரசியல், கொள்கை கிடையாது. எங்களின் வாழ்க்கை, கொள்கை, அரசியல் எல்லாம் மண்ணையும், விவசாயத்தையும் நம்பியிருக்கிறது.

எனவே, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக விவசாயிகளின் நடவடிக்கை தீவிரமடையும் என எச்சரிக்கிறோம். விவசாயிகளின் கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுக்குத் தான் ஆதரவு அளிக்க உள்ளோம். மேலும், தமிழக அரசின் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

டெல்டாவில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க பெரு நிறுவனங்களுக்கு இடம் அளிப்பதை திமுக அரசு நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2024, ஜன.1-ம் தேதி தஞ்சாவூரில் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கவுள்ளோம். இந்தப் பிரச்சார பயணம் ஜன.5-ம் தேதி திருவாரூரில் நிறைவு பெறும் என்றார்.

SCROLL FOR NEXT