திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் மிதமான மழை நீடிக்கிறது.
இரு மாவட்டங்களிலும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குறிப்பிட்ட இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 12, சேர்வலாறு - 9, நம்பியாறு, அம்பாசமுத்திரம் - தலா 6, கொடு முடியாறு - 7, சேரன்மகாதேவி - 4.4, ராதாபுரம், நாங்குநேரி - தலா 10, களக்காடு - 13.2, கருப்பாநதி, தென்காசி - தலா 2, சிவகிரி - 8. அணைப் பகுதிகளில் நீடிக்கும் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாப நாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 105.75 அடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று நேற்று காலையில் 106.20 அடியாக உயந்தது. அணைக்கு விநாடிக்கு 766 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 504 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 118 அடி உச்ச நீர் மட்டம் கொண்ட மணி முத்தாறு அணை நீர்மட்டம் 73.45 அடியிலிருந்து 73.80 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு 302 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 35 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
85 அடி உச்ச நீர் மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 76.80 அடியாக இருந்தது. அணைக்கு 47 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 60 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணையில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து 9 நாட்களுக்குப் பின் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று வனத்துறை அனுமதி அளித்தது.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மலைப் பகுதிகளில் நேற்று பெய்த மழையால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.