கயத்தாறு பகுதியில் மழையால் வேரோடு சரிந்து சேத மடைந்த மக்காச்சோளம் பயிர்களுடன் விவசாயிகள். 
தமிழகம்

கயத்தாறு, கழுகுமலையில் மழையால் பயிர்கள் சேதம்

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கழுகுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 22-ம் தேதி இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கே.வெங்கடேஸ்வரபுரம் கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 250 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் வேருடன் சாய்ந்து சேதமடைந்தன. சம்பந்தப்பட்ட இடத்தை வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட்டனர். இதுபோல கயத்தாறு ஊராட்சிக்கு உட்பட்ட உசிலங்குளம் கண்மாயின் மேல் பகுதி உடைந்ததையடுத்து, அதன் அருகே உள்ள நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர், உளுந்து பயிர் சேதமடைந்துள்ளது. கண்மாயில் ஏற்பட்ட உடைப்பை வருவாய் துறையினர் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு தெரிவித்தனர். அதையடுத்து உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், கயத்தாறு வட்டத்துக்கு உட்பட்ட பெரியசாமிபுரம் பகுதியில் பெய்த மழையினால் அப்பகுதியில் பயிரிடப்பட்ட சுமார் 250 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் சரிந்தன. கயத்தாறு வட்டத்துக்கு உட்பட்ட உசிலங்குளம், பெரியசாமிபுரம் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்களான ரேணுகா, ஆறுமுகநயினார் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை வட்டாட்சியர் நாகராஜனிடம் சமர்ப்பித்துள்ளனர். பயிர் பாதிப்பு இடத்தை வேளாண்மை துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்த பின்னரே பாதிப்புகளின் மதிப்பீடு தெரியவரும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

SCROLL FOR NEXT