தமிழகம்

உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களுக்கு உணவு வழங்க உதவிய திருச்செங்கோடு ரிக் இயந்திரம்

செய்திப்பிரிவு

நாமக்கல்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களுக்கு திருச்செங்கோட்டில் உள்ள ரிக் நிறுவனம் தயாரித்த இயந்திரம் மூலம் மருந்து, உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டதில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை பத்திரமாக மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரிக் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இயந்திரம் மூலம் வழங்கப்பட்டது.

ரிக் தயாரிப்பு நிறுவன மேலாண் இயக்குநர்கள் பரந்தாமன் மற்றும் ஜெயவேல்

இதுகுறித்து ரிக் தயாரிப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் பரந்தாமன் மற்றும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி சாலைப் பணிகள் மேற்கொள்ளும் மற்றொரு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜெயவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்களிடம் உள்ள சிடி-5 என்றநவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி, உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் 6 அங்குலம் அளவுக்கு துளையிட்டு, சுரங்கப் பாதைக்குள் சிக்கியதொழிலாளர்களுக்கு உணவு, மருந்து மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

சுரங்கப் பாதையில் துளையிட‘சிமென்ட்ரி சிஸ்டம்’ என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளோம். வழக்கமாக நிலத்தில் துளையிட்ட பின்னர், கேஸ்டிங் பைப் பொருத்தப்படும். ஆனால் ‘சிமென்ட்ரி சிஸ்டத்தில்’ துளையிடும்போதே உடன்செல்லும் கேஸ்டிங் பைப், ட்ரில்லரை வெளியில் எடுக்கும்போது துளைக்குள்ளேயே நின்றுவிடும் தொழில்நுட்பமாகும்.

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான், சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT