சென்னை: டிரினிடி ஆர்ட்ஸ் 13-வது ஆண்டு விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் ரசிகரஞ்சனி சபாவில்கடந்த 23-ம் தேதி விமரிசையாக தொடங்கியது. மறைந்த கல்வியாளர் பத்மா ராஜன் நினைவை போற்றும் வகையில் இந்த ஆண்டுவிழா நடைபெறுகிறது. இதில் பிரபல கர்னாடக இசை பாடகி சுதா ரகுநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இசை, நாட்டியகலைஞர்கள், இளம் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘மனித நேயரும், கலைகளில் ஆர்வம் மிக்கவரும், கல்வியாளருமான பத்மாராஜன் ஆற்றிய செயல்கள் மகத்தானவை’’ என்றார்.
கர்னாடக இசை வித்வான் மதுரை ஜி.எஸ்.மணி, பரதநாட்டிய மேதை சாவித்திரி ஜெகன்னாதராவ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, ஷிஜித் நம்பியார் -பார்வதி மேனன் இணையருக்கு ‘பரத கலா ரத்னா’, பரதநாட்டியக் கலைஞர் நவியா நடராஜனுக்கு ‘நாட்டிய கலா மணி’, மிருதங்க வித்வான் கே.வி.பிரசாத்துக்கு ‘இசைப் பேரரசர்’ விருது வழங்கப்பட்டது. இளம் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. பாரதிய வித்யா பவன் தலைவர் ‘இந்து’ என்.ரவி. வாழ்த்து மடல் அனுப்பியிருந்தார் ரசிக ரஞ்சனி சபாவில் இந்த விழா நவ.27-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
மனிதநேயர் பத்மா ராஜன்: ஆதரவற்ற, ஏழை குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பணியாற்றி வந்தவர் கல்வியாளர் பத்மா ராஜன். சென்னையில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறியவர். பின்னர், செர்பியாவுக்கு வந்து, ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்ட அவர், கடந்தஜூலை மாதம் காலமானார்.