ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகன் (52) பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் பெற்றோர், கிராம மக்களுடன் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், யாரும் எழுத்துப்பூர்வமாக போலீஸில் புகார் அளிக்கவில்லை.
இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவகுமார் தலைமையில் நன்னடத்தை அலுவலர் ஜூலி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் பள்ளிக்குச் சென்று மாணவிகள், பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அதில், மாணவிகளுக்குத் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், போலீஸில் புகார் அளிக்கவும் முடிவு செய்திருப்ப தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவாய்பட்டியில் உள்ள பள்ளியில் பணியாற்றியபோது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோவில் கைதானது குறிப்பிடத்தக்கது.