சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்ட இரு நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்று பதவிப் பிரமாணம் செய்தார்.
அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்த விவேக்குமார் சிங் மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்த எம்.சுதீர் குமார் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இருவரையும் வரவேற்று அரசு தலைமைவழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பலர் பேசினர்.
1968 மார்ச் 25 -ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் பிறந்த விவேக் குமார் சிங், கடந்த2017 செப்டம்பரில் அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதேபோல கடந்த 1969 டிச.21 -ம் தேதி தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பிறந்த எம். சுதீர் குமார், 2022 மார்ச் மாதம் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது.